திறமைக்கான கௌரவச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் நேற்று(30) வெள்ளிக்கிழமை திறமைக்கான கௌரவச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலையில் உள்ள அனைத்து மாணவர்களதும் திறமைகள் இனங்காணப்பட்டு, மாணவர்களுக்கு சான்றிதழும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், பிள்ளைகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டன.
வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முனைப்பு நிறுவனத்தினால் தூர இடங்களில் இருந்து கால்நடையாக பாடசாலைக்கு வருகைதருகின்ற, வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், மாணிக்கப்போடி அறக்கட்டளை அமைப்பின் அனுசரணையில், கவின்நிலைப்படுத்தப்பட்ட வகுப்பறையொன்று திறந்து வைக்கப்பட்டதுடன், புலம்பெயர் பழைய மாணவர்களினால் நிழல்பிரதி இயந்திரமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது பற்றியம் இரண்டாவது செய்தி மடலும் வெளியீடு செய்யப்பட்டது.
நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் தி.தவனேசன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர் செ.கிரிதரன், முனைப்பு நிறுவனத்தின் தலைவர் மா.சசிகுமார், பொருளாளர் தயானந்தரவி, மாணிக்கப்போடி அறக்கட்டளை அமைப்பின் தலைவர் மா.குமாரசாமி, கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.